ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது; மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Update: 2019-10-19 23:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு காலனியில் வசிப்பவர் சண்முகம் (வயது 63). இவர் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சில நாட்களுக்கு முன்பு இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சின்னமனூரில் வசிக்கும் தங்களது உறவினரின் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சண்முகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து சண்முகம் வன்னியம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விருதுநகரில் உள்ள தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்த முகம்மது சாரிக் (35) மற்றும் நெல்லையை சேர்ந்த கணேசன் (46) ஆகியோரை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்