இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ கட்டாயம் அணிய வேண்டும் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் குடும்பத்தை நினைத்து ‘ஹெல்மெட்’ கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, கருவேல மரங்கள் அகற்றுவது, கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிவது குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று நடந்தது. இந்தியன் ரெட்கிராஸ் சங்க சேர்மன் பர்வதா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், உதவி கலெக்டர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் இந்திரநாத் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் கிரீன்சர்க்கிள், காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், அண்ணாசாலை, தீயணைப்பு நிலையம் வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில், கல்லூரி மாணவ-மாணவிகள், காவல்துறையினர், இந்தியன் ரெட்கிராஸ் சங்க நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தின் முடிவில் கலெக்டர் பேசியதாவது:- இந்தியாவில் மனித உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவது சாலை விபத்துகளில் தான். வாகன பெருக்கம் இதற்கு ஒரு காரணமாகும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாததால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.
சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 11 சதவீதம் சாலைகளை கடந்து செல்லும்போதும், எதிரே செல்லும்போதும் வாகனங்களை கவனிக்காததால் ஏற்படுகிறது. ஒவ்வொரு உயிரிழப்பும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே அழித்து விடுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் குடும்பத்தை நினைத்து ‘ஹெல்மெட்’ கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும்.
இயற்கைக்கு மிகவும் சவாலாக உள்ள கருவேல மரங்களை அகற்றிட மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டைவிட டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இயற்கைக்கு மிகப்பெரிய எதிரியான பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். சில்லரை கடை மற்றும் காய்கறிக்கடை வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மக்களின் எதிர்காலத்திற்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், இந்தியன் ரெட்கிராஸ் சங்க துணைத்தலைவர் வெங்கடசுப்பு, பொருளாளர் பாஸ்கர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாறன், பிரியதர்ஷினி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவிகமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர்கள் பாலமுருகன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.