தஞ்சையில் நாளை நடக்கிறது சரசுவதி மகால் நூற்றாண்டு விழா - 2 அமைச்சர்கள், எம்.பி. பங்கேற்பு

தஞ்சை சரசுவதி மகால் நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது. இதில் 2 அமைச்சர்கள், எம்.பி. கலந்து கொள்கிறார்கள்.

Update: 2019-10-19 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் பொது நூலகமாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை)தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உலக பொதுமறை நூல் திருக்குறளை தாமிரப்பட்டயத்தில் வெளியிடவுள்ளார். அமைச்சர் துரைக்கண்ணு சரசுவதி மகால் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிடவுள்ளார்.

வைத்திலிங்கம் எம்.பி. நூற்றாண்டு நிறைவு விழா நினைவு தபால் தலையினை வெளியிடவுள்ளார். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் பொது நூலகமாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை தஞ்சை அரண்மனை வளாகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இந்த 3 நாட்களிலும் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் 21-ந்தேதி மாலை 3 மணி முதல் கருத்தரங்கம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தொடர்புடைய அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, சரசுவதி மகால் நூலக ஆட்சிக்குழு உறுப்பினர் சிவாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்