கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் பிரபாகர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் சம்பாரன்குட்டை, சின்னராஜிகான்குட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளதையும், நீர் வெளியேறும் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் 10 பெரிய ஏரிகளும், தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் 39 குளங்கள் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கங்கலேரி ஊராட்சியில் தவளம் ஏரி, ஆலப்பட்டி ஊராட்சியில் ஆலப்பட்டி ஏரி, சோக்காடி ஊராட்சியில் பெரிய ஏரி, இட்டிக்கல் அகரம் ஊராட்சியில் பாலகுறி ஏரி, பெல்லாரம் பள்ளி ஊராட்சியில் பாறையூர் ஏரி, அகசிப்பள்ளி ஊராட்சியில் பாப்பன் ஏரி, பெத்தனப்பள்ளி ஊராட்சியில் நாகுகுட்டை ஏரி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் சின்னப்பநாயக்கன் ஏரி, கம்மம்பள்ளி ஊராட்சியில் குட்டியாரெட்டி ஏரி, நாரலப்பள்ளி ஊராட்சியில் வீரப்பன் ஏரி என மொத்தம் 10 ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.
அதே போல கிருஷ்ணகிரி ஊராட்சியில் 39 குளங்கள் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளில் 36 குளங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஒன்றிய பொறியாளர் அந்தோணி ஆசைதம்பி, செல்வம், பணி மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள ராசு வீதி பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிக்கு கலெக்டர் பிரபாகர் சென்றார். அங்கு டெங்கு நோய் தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார்.