பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகரமைப்பு அதிகாரி கைது

நீலகிரி மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையர் மீது அவதூறு பரப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகரமைப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-19 23:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி பெற்று விட்டு, தங்கும் விடுதிகள் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூடலூர் நகராட்சி நகரமைப்பு அதிகாரி அறிவுடை நம்பிக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையே விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிட பணியை தடுக்க தவறியதாகவும், அதிகாரியின் உத்தரவை உதாசீனப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நகரமைப்பு அதிகாரி அறிவுடை நம்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி கமி‌‌ஷனர் நாராயணன் தன்னை அறிவுடைநம்பி தகாத வார்த்தையால் திட்டியதாக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி அறிவுடை நம்பி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊட்டி நகராட்சி ஆணையர் குறித்து அறிவுடை நம்பி அவதூறு பரப்பியதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி நகர மத்திய போலீசார், அறிவுடை நம்பியை கைது செய்தனர். தன்னை பணியிடை நீக்கம் செய்த அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டி, அவதூறு பரப்பிய நகரமைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்