பெண் டாக்டரிடம் நகை பறித்த வழக்கில் 5 பேர் கைது

பெண் டாக்டரிடம் நகை பறித்த வழக்கில் அவருடைய கார் டிரைவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-19 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெருமாள் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி ஏஞ்சலின் ஜெஸ்ஸி (வயது 50). டாக்டர். சிறிய மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஏஞ்சலின் ஜெஸ்ஸி வழக்கம்போல் தனது காரில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

காரை அவரது டிரைவர் ஓட்டி வந்தார். காஞ்சீபுரம் வையாவூர் கவுரி அம்மன் பேட்டை பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர்.

பின்னர் காரில் இருந்த டாக்டர் ஏஞ்சலின் ஜெஸ்ஸியிடம் கத்திமுனையில் அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் தப்பிச் செல்வதற்கு முன்பு கார் கண்ணாடியை அந்த மர்ம கும்பல் உடைத்தது. இதில் காரில் இருந்த டிரைவர், டாக்டர் ஏஞ்சலின் ஜெஸ்ஸி ஆகியோருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஏஞ்சலின் ஜெஸ்ஸி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த வழப்பறி கும்பலை வலைவீசி தேடி வந்தார்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் பொண்ணேரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும், 2 பேர் நடந்தும் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காஞ்சீபுரம் கோபால்சாமி தோட்டத்தை சேர்ந்த ராஜா (19), டாக்டர் ஏஞ்சலின் ஜெஸ்ஸியிடம் கார் டிரைவராக பணிபுரிந்ததாகவும், தன்னுடைய தலைமையில் வழிப்பறி நடந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ராஜா, அவர் இல்லாத சமயத்தில் மற்றொரு டிரைவரான காஞ்சீபுரம் அமுதபடி பின் தெருவை சேர்ந்த சவுந்தரராஜன் (29), காஞ்சீபுரம் ஹைதர் பட்டறை தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், காஞ்சீபுரம் கோபால்சாமி தோட்டத்தை ரவி (19), காஞ்சீபுரம் பொய்யா குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், 2 கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்