சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் நான் அரசியல் காரணங்களுக்காக கோவிலை தவறாக பயன்படுத்தி விட்டேன் என்று கூறினார். மேலும் நான் செய்த தவறுக்கு மக்களும் என்னை மன்னிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மைசூரு,
கர்நாடகத்தில் நடந்து வந்த காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் இருந்து திடீரென 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்தவர்களில் முக்கியமானவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்த எச்.விஸ்வநாத்.
இந்த நிலையில் எச்.விஸ்வநாத் பா.ஜனதாவிடம் விலைபோய் விட்டதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக பா.ஜனதாவினரிடம் இருந்து அவர் ரூ.25 கோடி பெற்றதாகவும் முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதை எச்.விஸ்வநாத் மறுத்தார்.
மேலும் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு சத்தியம் செய்ய தயார் என்று சவால் விட்டார். அதை சா.ரா.மகேசும் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எச்.விஸ்வநாத்தும், சா.ரா.மகேசும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தனர். ஆனால் எச்.விஸ்வநாத் சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு சத்தியம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் திடீரென சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு நேற்று(அதாவது நேற்று முன்தினம்) நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக நான் அம்மனிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் காரணங்களுக்காக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை தவறாக பயன்படுத்தி விட்டேன். நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து அருளும்படி சாமுண்டீஸ்வரி தேவியிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இன்று(அதாவது நேற்று) வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமை நாள் என்றால் அம்மனுக்கு உகந்த நாள் என்பது அனைவரது நம்பிக்கை. அதனால்தான் நான் இன்று அம்மன் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளேன்.
நான் செய்த தவறு என்னுடைய மனசாட்சியை மிகவும் உறுத்தியது. கோர்ட்டுக்கு சென்று தவறை நிரூபிக்க வேண்டுமென்றால் ஏராளமான சாட்சியங்கள் வேண்டும். ஆனால் எவ்வளவு பெரியவராக இருந் தாலும் கடவுள் முன்பு நாம் சிறியவர் தான். இனிமேல் நான் அரசியல் காரணங் களுக்காக சாமுண்டீஸ்வரி அம்மனையும், கோவிலையும் தவறாக பயன்படுத்த மாட்டேன்.
நான் செய்த தவறை என் மனது ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நான் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மன்னிப்பு கேட்டுள்ளேன். அதேபோல் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மன்னிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.