எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்

திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அங்கு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம் பிடித்ததாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.

Update: 2019-10-18 23:39 GMT
திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் வாரி சுருட்டி சென்றதையொட்டி, திருச்சி மாநகரில் உள்ள நகைக்கடைகள், அடகுக் கடைகள் மற்றும் வங்கிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், அடகுக்கடை உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கமிஷனர் அமல்ராஜ் பேசியதாவது:-

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல்(முருகன் கூட்டாளிகள்) 1995-ம் ஆண்டு முதலே பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

திருச்சியில் மேலும் 3 இடங்களில் அக்கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதாவது கொள்ளையடிக்க சென்ற இடத்தில் எச்சரிக்கை மணி(அலாரம்) ஒலித்ததாலும், லாக்கரை உடைக்க முடியாததாலும் கொள்ளை முயற்சியை கைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்தால்கூட முழுமையாக நகையையோ அல்லது பணத்தையோ கைப்பற்ற முடியாது. மண்ணுக்குள் புதைத்து வைத்தால் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. நகையை உருக்கி விற்று விட்டால் கிடைப்பது கடினம். எனவே, திருட்டு போகாமல் இருக்க என்ன வழி? என தீர்வு காணவேண்டும்.

குற்றங்களை தடுக்க தேவையான நடைமுறை உள்ளது. ஆனால், காவல்துறைக்கு அது கிடையாது. காவல்துறை குற்றங்களை கண்டுபிடிக்க மட்டுமே முடியும். நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக பத்திரிகைகளில் தினமும் சுவராஸ்யமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கு கொள்ளையன் முருகன் தொடர்பாக ஏதேனும் புதிய தகவல் உள்ளதா? என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் சொல்லாமல் இருந்தால், அவர்களாகவே புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு விடுகிறார்கள்.

திருச்சி மாநகரில் பல கடைகளில் லாக்கரே இல்லை. எனவே, கட்டாயம் லாக்கர் வைப்பது அவசியம். அதுபோல நகைக்கடைக்காரர்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்வதும் அவசியம். எங்கள் நிர்வாகத்தில் குற்றங்களே நடக்கவில்லை. இனியும் நடக்காது என கருதி விடக்கூடாது. நடந்து விட்டால் என்ன செய்வது?. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் குற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில் நகை மற்றும் வங்கிகளில் கண் காணிப்பு கேமராக்கள் வைப்பது முக்கியமல்ல. அந்த பதிவை நீண்ட காலம் அழிய விடாமல் ‘ஸ்டோரேஜ்’ செய்வதும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்