70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்காக செய்தது என்ன? தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா கேள்வி
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்காக செய்தது என்ன? என மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கேள்வி எழுப்பினார்.;
கட்சிரோலி,
மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று பழங்குடியின மக்கள் நிறைந்த மற்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி மாவட்டம் அகெரியில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மத்தியில் 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யாமல் இருந்ததன் விளைவு அங்கு பயங்கரவாதம் பரவியது. 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஓட்டு வங்கி அரசியலுக்காக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்யாமல் இருந்தது.
ஆனால் 300 இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்ததும் முதல் நாடாளுமன்ற கூட்டத்திலேயே மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சர்ச்சைக்குரிய அந்த சட்டப்பிரிவை நீக்கியது.
இதன் மூலம் பிரதமர் மோடி நாட்டை பாதுகாத்து இருக்கிறார். இனி எப்போதும் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கும்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், மராட்டிய சட்டசபை தேர்தலுக்கும் என்ன தொடர்பு என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கேட்கின்றன. ராகுல்காந்தி வரலாற்றை படிக்க வேண்டும். இது மன்னர் சரத்பதி சிவாஜி, சாவர்கர் ஆகியோரது பூமி ஆகும். இந்த மண்ணின் மைந்தர்கள் நாட்டை பாதுகாக்க ஒரு போதும் தயங்க மாட்டார்கள்.
உங்களது குடும்பத்தின் நான்கு தலைமுறையினர் 70 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செய்தது என்ன? என ராகுல்காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால் மோடிக்கு கொடுக்கப்பட்ட 5 ஆண்டுகளில் நாங்கள் அந்த சமூகத்திற்காக பல பணிகளை செய்து உள்ளோம்.
எங்களது 5 ஆண்டுகால செயல்பாடு உங்களது 50 ஆண்டுகால ஆட்சியை விட சிறப்பானது. இதுபற்றி விவாதம் நடத்த தயாரா என சரத்பவாருக்கு சவால் விடுகிறேன். நாங்கள் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.