பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கு: ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர், இயக்குனரை அமலாக்கத்துறை கைது செய்தது
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன.
மும்பை,
வழக்கில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் ராகேஷ் வாதாவன், அவரது மகனும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான சாரங் வாதாவன், பி.எம்.சி. வங்கியின் முன்னாள் சேர்மன் வர்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், முன்னாள் இயக்குனர் சுர்ஜித் அரோரா ஆகியோர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் வர்யம் சிங், ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், பி.எம்.சி. முறைகேடு வழக்கில் நேற்று ராகேஷ் வாதாவன் மற்றும் சாரங் வாதாவன் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் தந்தை, மகன் இருவரும் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் பணமோசடி குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜ்வைத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இருவரையும் வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.