ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மணல் திருட்டு; விவசாயிகள் புகார்

சிவகாசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மம்சாபுரத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் தெரிவித்தனர்.

Update: 2019-10-18 22:30 GMT
சிவகாசி,

சிவகாசியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது.உதவிகலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கேரிக்கைகள் விவரம் வருமாறு:-

வீட்டுமனைப்பட்டா கோரி மனு கொடுத்தவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா மற்றும் ராபிபயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கட்டுவதற்கான நாட்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.சிறு,குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கு அந்தந்த குறுவட்ட அளவில் முகாம் அமைத்து மேற்படி சான்று வழங்க வேண்டும். மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாயிலும், ரெங்கப்பநாயக்கர் கண்மாயிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. இதில் வாழைக்குளம் கண்மாயில் மடையைசரிவர செப்பனிட வில்லை. ரெங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் கலுங்குகளை ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து 1 அடி குறைவான அளவிற்கு கட்டிய காரணத்தினால் கலுங்குகளையும், சரியான அளவிற்கு அமைக்கும் பட்சத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவோம்.செண்பகதோப்பு பகுதியில் அணைகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மம்சாபுரத்தில் மணல் திருட்டு அதிக அளவில் உள்ளது. இதை தடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் மானியவிலையில் கொய்யா, மா,சப்போட்டா, மரக்கன்றுகள் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து பேசினார்கள்.

இதற்கு சிவகாசி உதவி கலெக்டர் தினேஷ்குமார் பதில் அளித்து பேசியதாவது:-

இலவச வீட்டு மனைப்பட்டா கோரிமனு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உடனே வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வங்கிகள் மூலம் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு,குறு விவசாயிகள் சான்று பெற வியாழக்கிழமைதோறும் குறுவட்ட அளவில் முகாம் அமைத்து சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மம்சாபுரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய், ரெங்கப்ப நாயக்கன்பட்டி கண்மாய் பழுதுகளை பொதுப்பணித்துறையின் மூலம் சரி செய்யப்படும்.மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மானிய விலையில் மரக்கன்றுகள் மற்றும் விதைகள் பெறுவதற்கு விவசாயிகள் அடங்கல், புலப்படநகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் இணைத்து மனு அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்