தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அன்னலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர். இவருடைய மனைவி வீரலட்சுமி. இவர்களுடைய மகன் விமல்ராஜ் (35), கூலி தொழிலாளி. இவருக்கு சுடலைக்கனி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இவர் தூத்துக்குடியில் வேலை செய்து வந்ததால் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீரலட்சுமி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர், விமல்ராஜை இறக்கிவிட்டு சென்றனர். சிறிது நேரத்தில் விமல்ராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகலிங்கம் (48) தரப்பினர் விமல்ராஜை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
கொலை நடந்த இடம் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு சிப்காட் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிப்காட் போலீசார், நாகலிங்கம் உள்பட பலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாகலிங்கம், அவருடைய மகன்கள் மணிகண்டன் (20), லட்சுமி
நாராயணன் (19), ராஜகோபால்நகரை சேர்ந்த மாரிமுத்து (21), மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (21), அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் ராஜா (18) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.