ரஞ்சன்குடிகோட்டை அருகே, மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
ரஞ்சன்குடிகோட்டை அருகே மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் சிலர் மானை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனசரகர் சசிக்குமார், வனவர் பாண்டியன், வனக்காப்பாளர்கள் பொன்னுசாமி, ராமையா ஆகியோர் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ரஞ்சன்குடி கோட்டை அருகே உள்ள பகுதியில் சிலர் நாய் உதவியுடன் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை சாக்குப்பையில் வைத்து கொண்டு 2 பேர் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்கள் தப்பி சென்றனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அப்போது வாலிகண்டபுரம் மேம்பாலம் பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து மான் இருந்த சாக்குப்பையை சாலையோரம் தூக்கி வீசி விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். இதையடுத்து அந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றினர். ஆனால் அந்த மானின் தலைப்பகுதி இல்லை. இதையடுத்து வனத்துறையினர் தப்பி சென்றவர்களை விசாரணை நடத்தி வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுநடுவலூர் கிராமத்தில் பதுங்கியிருந்த 2 பேரை வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் பாலமுருகன்(வயது 26), மற்றொருவர் 18 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. அப்போது அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பாலமுருகன், சிறுவன், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன், மகேந்திரன், மதி, துற்று ஆகிய 6 பேர் சேர்ந்து நாய் உதவியுடன் 4 வயதுடைய ஆண் மானை வேட்டையாடி, மானின் தலையை அறுத்து குழித்தோண்டி மண்ணுக்குள் புதைத்து விட்டு, உடல் பகுதியை மட்டும் மணிகண்டனும், மகேந்திரனும் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாலமுருகனையும், சிறுவனையும் கைது செய்தனர். தலைமறைவான ரெங்கநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன், மணிகண்டன், மதி, துற்று ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் வேட்டையாடிய மானை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.