திருடிய பணத்தை மீட்பதற்காக கைதான பெண்ணுடன் புதுக்கோட்டை வந்த மதுரை போலீசாரால் பரபரப்பு

திருடிய பணத்தை மீட்பதற்காக கைதான பெண்ணுடன் மதுரை போலீசார் புதுக்கோட்டை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-18 23:00 GMT
புதுக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராமர்(வயது 51). இவர் சீதாலட்சுமி(40) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது 4 மகள்களுடன் புதுக்கோட்டை சிவகாமி நகரில் வசித்து வருகிறார். மதுரை திலகர்திடல் போலீசார் சீதாலட்சுமியை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் அடுத்தடுத்து 5 வழக்குகள் அவர் மீது பதிவாகி உள்ளது.

இதில் ஒரு வழக்கில் சிறையில் 3 மாதம் இருந்த சீதாலட்சுமி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இவர் 3 நாட்கள் மதுரையில் உள்ள திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ள பணத்தை ஒப்படைக்க மதுரை போலீசார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சிங்கம்புணரி வழக்கு தொடர்பாக திருடிய பணத்தை சிங்கம்புணரி போலீஸ் நிலையம் வந்து ஒப்பைடைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் திருட்டு வழக்கில் குடும்பத்தினரை சேர்த்து விடுவேன் என கைது செய்யப்பட்ட சீதாலட்சுமியின் கணவர் ராமரிடம் மதுரை குற்றப்பிரிவு போலீசார் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருடிய ரூ.50 ஆயிரத்தை பெறுவதற்காக சீதாலட்சுமியை அழைத்து கொண்டு மதுரை குற்றப்பிரிவு போலீசார் புதுக்கோட்டைக்கு வந்தனர். அங்கு வைத்து திருடிய ரூ.20 ஆயிரத்தை திரும்ப கொடுத்ததாக கூறப்படுகிறது. ராமரின் இரு மகள்கள் மதுரை போலீசாரிடம் தங்கள் அம்மாவை விட்டுவிடுங்கள் என காலில் விழுந்து கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அவர்களை கீழே தள்ளிவிட்டு சீதாலட்சுமியை காரில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் போலீசார் தள்ளிவிட்டதில் ராமரின் மகள் வைஷ்ணவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் திருக்கோகர்ணம் போலீசில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இதற்கிடையில் ராமருக்கு அவரது மனைவி போன் செய்து, போலீசாருக்கு மீதம் ரூ.30 ஆயிரத்தை மதுரை அருகே பாலத்தில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தன்னை அழைத்து செல்ல கூறியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சீதாலட்சுமியின் கணவர் ராமர் மற்றும் அவரது நண்பர்களிடம் மதுரை போலீசார் பேசியதாக செல்போனில் பேசியதாக உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்