வெந்நீர் போட்டபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்

சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், வெந்நீர் போட்டபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் சாவு, சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2019-10-18 23:15 GMT
பூந்தமல்லி,

சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருடைய மனைவி ஜாக்குலின்(வயது 27). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்தில் சாலை விபத்தில் பிரவீன்குமார் இறந்துவிட்டார்.

குழந்தையுடன் பூந்தமல்லியை அடுத்த கீழ்மாநகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த ஜாக்குலின், வார நாட்களில் குழந்தையை மாமியார் வீட்டுக்கு அழைத்துச்சென்று காண்பித்து வருவது வழக்கம்.

அதன்படி தனது மாமியார் வீட்டுக்கு வந்த ஜாக்குலின், அடுப்பில் வெந்நீர் காய்ச்சியபோது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜாக்குலின், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். தாய்-தந்தையை இழந்து அவர்களின் குழந்தை அனாதையானதை கண்டு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்ணீர் விட்டனர்.

இதற்கிடையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜாக்குலினின் தாய் சீலா, திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்