வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள, அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது - வருவாய் நிர்வாக ஆணையர் பேச்சு

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-18 22:00 GMT
நாகப்பட்டினம்,

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை சார்பில் ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 116 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளான கொள்ளிடம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் படகுகள் தயார் நிலையில் வைக்க மீன்வளத்துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள படகுகளையும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை மூலம் 11 வட்டாரங்களிலும் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வட்டாரங்களிலும் தேவையான மருந்து பொருட்களும் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மீட்புப்பணிகளுக்காக 523 கிராமங்களிலும் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம நிர்வாக அலுவலர், தன்னார்வ தொண்டர்கள், கிராம உதவியாளர்கள், செவிலியர், நீச்சல் வீரர்கள், ஊராட்சி செயலாளர், மின் கம்பியாளர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழையின் போது பாதிக்க கூடிய பகுதிகளில் மீட்கப்படும் மக்களையும், கால்நடைகளையும் தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் 1077 இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் கலாநிதி, வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்