எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதே நாராயணசாமிக்கு வாடிக்கை - ரங்கசாமி தாக்கு
எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதே முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வாடிக்கை என்று ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் நேற்று கிருஷ்ணாநகரில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், திருமுருகன் உள்பட பலர் இருந்தனர்.
அப்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் லட்சியமே புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான். அதேபோல் அ.தி.மு.க.வின் கொள்கையும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான். இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் தற்போது ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் இதற்காக எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியிருந்தும் அதற்கான கோப்புகளை ஏன் கவர்னருக்கு அனுப்பவேண்டும்.
அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என்று கோர்ட்டு கூறியுள்ளது. அதன்பின்னரும் கவர்னர் மீது அரசு குறை கூறக் கூடாது.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. அதேபோல் சட்டமன்ற அறிவிப்புகளையும் செயல் வடிவத்துக்கு கொண்டுவரவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதையே முதல்-அமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுவை காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே ராஜீவ்காந்தி மீது அக்கறை இருந்தால் அவரது கொலையை நியாயப்படுத்திய தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று சொல்ல தயாரா? தற்போது காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜான்குமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்தான்.
தி.மு.க.வை விமர்சனம் செய்துவிட்டுதான் காங்கிரசில் இணைந்தார். இந்த இடைத்தேர்தலில் மக்களிடம் ஓட்டுகேட்க காங்கிரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களுடைய நலனை பின்னுக்கு தள்ளிய அரசு இந்த அரசு.
ஆயிரக்கணக்கான அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்கூட போடவில்லை. சம்பளம் போடாததால் பாப்ஸ்கோ ஊழியர்களில் 2 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பலர் சம்பளம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களது சாவுக்கு காரணமான காங்கிரசுக்கு மக்கள் ஓட்டுப்போடலாமா?
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.