நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா? - திண்ணை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா? என்று நாங்குநேரி திண்ணை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Update: 2019-10-17 23:00 GMT
நெல்லை,

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொகுதிக்கு உட்பட்ட மேலதிருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் ஆகிய ஊர்களில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். ஆனால் தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முறையாக நெல்லைக்கு வந்துள்ளேன். நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று முடிவு செய்து விட்டுத்தான் என்னை சந்திக்க வந்திருக்கிறீர்கள்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஓட்டு பல மடங்காக பெருக வேண்டும். நீங்கள் மட்டும் வாக்களித்தால் போதாது உங்களுடைய உறவினர்கள், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரிடமும் கை சின்னத்துக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவர் மோடியின் எடுபிடியாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியை மக்கள் விரட்டி அடித்தனர். 2 கட்சிகளும் தமிழ்நாட்டை கண்டு கொள்ளவில்லை. ஒகி புயல், கஜா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வந்தபோது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து பார்க்கவில்லை. அதனால் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டினீர்கள்.

அதன்பிறகு மோடி தமிழ்நாடு பக்கம் வரவில்லை. இந்த நிலையில் தற்போது மோடி தமிழக மக்களுக்கு பயந்து மாறு வேடத்தில் வந்து சென்று இருக்கிறார். அதாவது வேட்டி கட்டி மாறு வேடத்தில் வந்தார். கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கினார். அதை பார்த்து தமிழகத்துக்கு அவர் செய்த துரோகங்களை மறந்து விடுவார்களா?

8 ஆண்டுகளாக அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் என்ன சாதனை செய்து இருக்கிறார்கள். விலைவாசி உயர்வுதான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை.

ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது, ஆஸ்பத்திரியில் அவர் எப்படி இறந்தார், எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மர்மமாக இருந்தது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் அடைத்து வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறினர். ஜெயலலிதாவின் உறவினர்கள், அமைச்சர்கள் உள்பட யாரையும் ஆஸ்பத்திரி உள்ளே அனுமதிக்கவில்லை. இதுவரை அரசு இதற்கு விளக்கம் அளிக்கவில்லை. திடீரென்று ஜெயலலிதா ஒரு நாள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

ஜெயலலிதா இறந்தபோது அழுது கொண்டே பதவி ஏற்றவர்கள், மறுமுறை பதவி ஏற்கும்போது ஒருவரும் அழவில்லை. அனைவரும் நடித்து உள்ளனர். இதற்கெல்லாம் சரியான தண்டனை வழங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. படித்து டாக்டர் ஆக வேண்டிய தாழ்த்தப்பட்ட பெண் அனிதாவை டாக்டர் ஆக விடாமல் நீட் தேர்வை திணித்தனர். எனவே, தமிழக ஏழை மாணவர்களை டாக்டருக்கு படிக்க விடாமல் நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா?

தி.மு.க. ஆட்சியில் நாங்குநேரி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும், மக்கள் கேட்டுள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப் படும். ரூபி மனோகரன் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து, அவரது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாலையில் உதயநிதி ஸ்டாலின், தேவநல்லூர், இடையன்குளம், கீழகருவேலன்குளம், டோனாவூர், சிறுமளஞ்சி மற்றும் மறுகால்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்