புதிதாக 5 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் டெண்டர் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

புதிதாக 5 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் டெண்டர் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-10-17 23:00 GMT
மதுரை, 

திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5 ஆயிரத்து 388 பெட்ரோல் பங்குகள் (நிலையங்கள்) உள்ளன.

இந்தநிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் புதிதாக 5 ஆயிரத்து 125 பெட்ரோல் விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டன.

முறையாக ஆய்வு செய்யாமல் இந்த முடிவு அரசியல் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனை பாதிக்கும். பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றை கருத்தில் கொள்ளாமல், தடையில்லா சான்று வழங்கி வருகின்றன. பொது கட்டிடங்களுக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

பெட்ரோல் நிலையங்களின் கழிவுப்பொருட்கள் பொது கால்வாயில் விடப்படுகின்றன. இது பொதுசுகாதாரத்திற்கு கேடாக அமைகிறது. தடையில்லா சான்று வழங்கும் போது மாவட்ட நிர்வாகம் இதை கவனிப்பதில்லை. பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளன. இந்தநிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பெட்ரோல் நிலையங்களை திறக்க டெண்டர் வெளியிட்டு இருப்பது முரணாக உள்ளது.

எனவே புதிதாக 5 ஆயிரத்து 125 பெட்ரோல் நிலையங்கள் திறப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதே போல் பெட்ரோல் நிலையங்களுக்கான டெண்டர் குறித்து மேலும் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் பிறப்பித்தனர்.

அதில், ஏற்கனவே செயல்பட்டு வரும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு ஆதரவாக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவை பொது நல மனுவாக கருத முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்