ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, விபத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு ரூ.28¾ லட்சம் இழப்பீடு
விபத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு ரூ.28¾ லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி(வயது 40). அவருடைய மனைவி பரமேஸ்வரி(34). இவர்கள் குடும்பத்தினருடன் கடந்த 14.4.2010 அன்று வேன் மூலம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதைதொடர்ந்து அவருடைய கணவர் சடையாண்டி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரண் பரமேஸ்வரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 200 இழப்பீடாக தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.
இதேபோல் வேனில் பயணம் செய்த ஆண்டிபட்டியை சேர்ந்த காண்டிராக்டர் பொன்னையா(52) படுகாயமடைந்து பலியானார். இதுகுறித்தும் தனியாக இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரண்பொன்னையா, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சத்து 55 ஆயிரம் இழப்பீடாக வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.