தனுஷ்கோடி கடல் பகுதியில் சிப்பி சீசன் தொடக்கம்
தனுஷ்கோடி கடல் பகுதியில் சிப்பிகள் சீசன் தொடங்கி உள்ளது. கரை ஒதுங்கி கிடக்கும் பல வகை சிப்பிகளை மீனவர்கள், சுற்றுலா பயணிகள் சேகரித்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே கடலுக்குள் பலவகை சிப்பிகள், சங்குகள் உள்ளன. அதிலும் தனுஷ்கோடியை ஒட்டிய தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் அதிகமான சிப்பிகள் உள்ளன.ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சிப்பிகள் சீசனாகும். இந்த சீசனின்போது கடலின் அடியில் பாறைகளை ஒட்டி வளர்ந்திருக்கும் பல வகை சிப்பிகளும் கடல் அலையின் வேகத்தால் கடலின் மேல்பகுதிக்கு வந்து கரை ஒதுங்கி விடும்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் சிப்பிகள் சீசன் கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி உள்ளது.எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கம்பிப்பாடு, அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் உள்ள பகுதிகளில் எண்ணிலடங்கா சிப்பிகள் மலைபோல் கடற்கரையில் ஒதுங்கி குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு கடல் அலையின் வேகத்தால் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பிகளை தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்ப்பதுடன் சிப்பிகளை வீடுகளுக்கும் அள்ளிச்செல்கின்றனர்.
இதுபற்றி சிப்பிகளை சேகரிக்கும் தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த முத்து முனியாயி என்ற மீனவ பெண் கூறியதாவது :- ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடல் பகுதியில் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சிப்பிகள் கிடைக்கும் சீசனாகும். கடல் அலையின் வேகத்தால் கடலின் அடியில் உள்ள பல வகை சிப்பிகளும் மேலே வந்து கரையில் ஒதுங்கி விடும். இதில் கண்ணாடி சிப்பி, வரிச்சிப்பி, கோபுர சிப்பி, தட்டுசிப்பி என பல வகை சிப்பிகளும் கரை ஒதுங்கும். இவ்வாறு கரை ஒதுங்கும் சிப்பிகளை சேகரித்து தரம் பிரித்து ராமேசுவரத்தில் உள்ள சங்கு கம்பெனிகளில் கொண்டு கொடுத்தால் 1 கிலோ சிப்பிக்கு ரூ.15 வரை கிடைக்கும்.கடந்த 3 ஆண்டுகளாக தனுஷ்கோடி கடல் பகுதியில் சிப்பிகளின் வரத்து குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். மீனவ பெண்கள் மூலம் பெறக்கூடிய அனைத்து வகை சிப்பிகளும் ரசாயனம், ஆசிட்மூலம் சுத்தம் செய்து பாலிஷ் செய்யப்பட்டு அழகு சாதன பொருட்களாகவும், கீ செயினாகவும் மாற்றி சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.