மீன்பிடி விசைப்படகுகள் செல்ல வசதியாக பாம்பனில் புதிய தூக்குப்பாலத்தை உயரமாக அமைக்க மீனவர்கள் கோரிக்கை
பாம்பனில் கட்டப்படும் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதி தூக்குப்பாலத்தை மீன்பிடி விசைப்படகுகள் செல்ல வசதியாக உயரமாக அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் ரூ. 250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள ரெயில் பாலத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது.புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் ஒரே இணைப்பில் மேல் நோக்கி சென்று திறக்கும் வகையில் தூக்குப் பாலம் அமைய உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கடல் நீர் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் அமைந்திருப்பதால் மீன் பிடி விசைப்படகுகள் தூக்குப்பாலம் திறக்கப்படாமல் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து பாம்பன் கடலில் கட்டப்படவுள்ள புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் கட்டப்பட உள்ள தூக்குப் பாலத்தை கடலில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் கட்ட வேண்டும் என ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதியும், ம.தி.மு.க.கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான பேட்ரிக் கூறியதாவது: பாம்பனில் 100 ஆண்டு களுக்கு மேலாக உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலம் கடல் நீர் மட்டத்தில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்தில் உள்ளது.இதனால் பாக்ஜலசந்தி பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி அல்லது மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து பாக்ஜலசந்தி கடல்பகுதிக்கு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டுமானால் தூக்குப்பாலம் திறந்தால் மட்டுமே செல்ல முடியும்.
புயல் உள்ளிட்ட அவசர காலத்தில் கூட படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் தூக்குப் பாலம் திறக்கும் வரை மீனவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் படகுகளும் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க வருகின்றன.
எனவே பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் கட்டப்படும் தூக்குப்பாலத்தை கடலில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் கட்ட வேண்டும். அப்படி கட்டினால் மட்டுமே விசைப் படகுகள் தூக்குப் பாலத்தை திறக்காமலே மீன் பிடிக்க செல்ல வசதியாக இருக்கும்.இதை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவர்களும் விரைவில் ரெயில்வேதுறை அமைச்சருக்கு தபால் மூலம் மனு அனுப்பவுள்ளோம். அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.