638 பேருக்கு திருமண உதவித்தொகை

ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற விழாவில் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 638 பேருக்கு திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார்.

Update: 2019-10-17 22:45 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி வரவேற்றார்.

விழாவில் 638 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கி பேசியதாவது:- அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 2011-ம் ஆண்டு முதல் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 304 பட்டதாரி பெண்கள், 334 பட்டதாரி அல்லாத பெண்கள் என மொத்தம் 638 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பருவமழை காலத்தில் மழை நீரை சேமிக்க ஏதுவாக மாவட்டத்தில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப்பணிகள் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன.

இதுதவிர பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் முதற்கட்டமாக 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் முத்துலெட்சுமி உள்பட அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்