தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம், அக்.18-
பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி நதியானது புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாமிரபரணி ஆறு பாய்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் 45 இடங்களில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் திருமஞ்சன படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கொடியசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.
பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் திட்டம், நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை நீட்டித்து உள்ளோம்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி, 45 இடங்களில் 3 நாட்கள் நடைபெறும். முதல் 2 நாட்கள் முழுவதும், பொக்லைன் எந்திரங்கள் மூலம், தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், அமலைச்செடிகளை அகற்றி தூய்மைப்படுத்துவோம்.
3-வது நாளில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூலம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை தங்களது சமூக பொறுப்பு நிதியை வழங்கி உள்ளன.
இந்த பணிக்காக என்.எல்.சி. நிறுவனம், தமிழ்நாடு மின்உற்பத்தி நிறுவனம் ஆகியவை தலா ரூ.1 கோடி சமூக பொறுப்பு நிதியை வழங்கியது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 88 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றை சுத்தமாக பராமரிப்பது குறித்து மாணவ-மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முறப்பநாடு, அகரம், வல்லநாடு, பக்கபட்டி, நாணல்காடு, ஆழிகுடி, அனந்தநம்பிகுறிச்சி, மணக்கரை, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கருங்குளம், கொங்கராயகுறிச்சி, புளியங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னங்குறிச்சி, தோழப்பன்பண்ணை, நவலட்சுமிபுரம், மாட்டுதாவணி, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, பால்குளம், சிவராமமங்கலம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, குரங்கணி, மங்களகுறிச்சி, ஏரல், ராஜபதி, உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தூய்மை பணிகள் நடைபெறுகிறது.