அம்மாபேட்டை அருகே, வெடிவிபத்தில் 2 பேர் பலியான கல்குவாரிக்கு ‘சீல்’ வைப்பு - உரிமையாளர்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
அம்மாபேட்டை அருகே வெடிவிபத்தில் 2 பேர் பலியான கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. கல்குவாரி உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை அடுத்து உள்ள அந்தோணிபுரத்தில் தனியாருக்கு சொந்தமாக கல் குவாரி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் நெரிஞ்சிப்பேட்டை கரட்டுகொட்டாயை சேர்ந்த செந்தில் (வயது 40), ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஜேடர்பட்டி ஆருளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (38), நெரிஞ்சிப்பேட்டை கோயில் கரட்டை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் கல்குவாாியில் உள்ள பாறைகளில் துளை போட்டு வெடிமருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் பாறை சரிந்து செந்திலும், ஆறுமுகமும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், அந்தியூர் தாசில்தார் மாலதி, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல், நிலவருவாய் அதிகாரி சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். பின்னர் வெடி விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் கல் குவாரிக்கு சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது வெடி விபத்து நடந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் கல்குவாரியில் முறையாக வெடிமருந்து பயிற்சி பெற்ற நபர்களை வைத்து கையாள தவறியது, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 3 பிரிவுகளின் கீழ் உரிமையாளர்கள் பூபதி, முத்துநாதன், மேலாளர் பழனிசாமி ஆகியோர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.