காஞ்சீபுரம் மாமல்லபுரத்தில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் பொன்னையா பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.;

Update: 2019-10-17 22:30 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. முக்கிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. செடிகள், மரங்கள் நடப்பட்டு புதுப்பொலிவுடன் மரகத பூங்கா சீரமைக்கப்பட்டது. அவர்களின் வருகைக்கு பின்னரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

அப்போது கடைக்காரர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கடைகள் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் பொன்னையா அதிகாரிகளுடன் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடற்கரை கோவிலையொட்டிய பகுதியில் செல்ல 60 அடி அகலத்தில் பாதை அமைத்தல், கடற்கரையில் புல்வெளியுடன் கூடிய பூங்கா அமைத்தல், கடற்கரைக்கு செல்ல மாசு இல்லாத பேட்டரி கார்கள் இயக்குதல், கடற்கரையில் அவசர தேவைக்கு டாக்டர்கள், நர்சுகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முக்கிய இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் அரசு ஒதுக்கி கொடுக்கும் இடத்தில் மட்டுமே கடை வைக்க வேண்டும் என்றும், புராதன சின்னங்கள் அருகில் கடை வைக்க அனுமதிக்க கூடாது என்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்