சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் செல்ல வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’ திட்டம் - டிசம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமல்
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல ‘பாஸ்டேக்’ திட்டம் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.
கோவை,
தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழி, 6 வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்ற பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியநிலை உள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க ‘பாஸ்டேக்’ என்ற திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செயல்படுத்தி உள்ளது.
பாஸ்டேக் திட்டம் செயல்படுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-
சுங்க கட்டணங்கள் செலுத்த வரிசையில் வாகனங்கள் நிற்பதால் தாமதம் ஆகிறது. இந்தநிலையை தவிர்க்க பாஸ்டேக் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படவில்லை. தற்போது பாஸ்டேக் திட்டம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி ‘மை பாஸ்ட் டேக்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இதுதொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி எண்-1033 என்ற எண் மூலமும் விவரங்களை பெறலாம்.
சுங்கச்சாவடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச்சேவை மையம்(காமன் சர்வீஸ் சென்டர்) ஆகியவற்றில் பாஸ்டேக் கார்டை பெறலாம். இந்த கார்டுகளை பெற ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், வாகன உரிமையாளர்களின் ஆதார் கார்டு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தனி பயன்பாட்டு குறியீடு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்படும்.
வாகன உரிமையாளர்கள் தாங்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி இந்த கார்டை பெறலாம். கடந்து செல்வதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். அனைத்து தொகையும் தீர்ந்த பின்னர் மீண்டும் ரீசார்ஜ்போல் கட்டணதொகையை பதிவேற்றிக்கொள்ளலாம்.
வங்கிகள் மூலம் பாஸ்டேக் கார்டு, ரீசார்ஜ் செய்யும் வசதியுள்ள கார்டு, தனிகார்டு என 3 வகைகளில் வழங்கப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் விருப்பத்துக்கு தகுந்தவாறு இதனை பெற்றுக்கொள்ளலாம்.
பாஸ்டேக் அனுமதிக்கான கார்டை வாகனங்களின் முன்புறம் ஒட்டி வைத்து இருக்க வேண்டும்.
சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, ரேடியோ அதிர்வலைகள் மூலம் பாஸ்டேக் ரீடர் கருவிகளில் வாகனங்களின் வருகை 3 நொடிகளுக்குள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக வாகனங்கள் காத்திருக்காமல் அனுப்பி வைக்கப்படும்.
ரொக்கப்பண பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கிலும், வாகன உரிமையாளர்களுக்கு சிரமம் மற்றும் காத்திருத்தலை குறைக்கவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை கணியூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜேஷ் கூறும்போது, இந்த திட்டம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு சுங்கச்சாவடி முன்பும் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் நடைமுறையை அனைத்து வாகனங்களின் உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டியது அவசியம். 100 சதவீதம் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் வரை கவுண்ட்டர் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் வசதியும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை வாகன உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.