சாம்ராஜ்நகரில் வருகிற 20-ந்தேதி முழுஅடைப்பு; வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
பந்திப்பூர் சாலையை இரவில் திறக்க வலியுறுத்தும் கேரள அரசை கண்டித்து சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதி முழுஅடைப்பு நடக்கும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. புலிகள் பாதுகாப்பு சரணாலயமாகவும் இந்த வனப்பகுதி திகழ்கிறது. பந்திப்பூர் வனப்பகுதி, கேரள, தமிழ்நாடு வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதி வழியாக கேரள, தமிழகத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வனப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு வரை மட்டும் குண்டலுபேட்டை-கேரளா இடையேயான பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் வாகனங்களில் அடிபட்டு 35 மான்கள், ஒரு யானை, ஒரு புலி, 2 குரங்குகள், முயல்கள் போன்ற வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.
இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை எந்த வாகனங்களும் பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் அனுமதிக்கப்படுவதில்லை. பந்திப்பூர் வனப்பகுதி சாலையில், இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகளின் உயிரிழப்பு 80 சதவீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 20 சதவீத வனவிலங்குகளின் உயிரிழப்புகளையும் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கேரளா-கர்நாடகம் இடையே வர்த்தகத்திற்கு முக்கிய சாலையாக பந்திப்பூர் வனப்பகுதி சாலை உள்ளது. இதனால், பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு நீக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு பந்திப்பூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கான தடையை நீக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால், பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கேரள அரசு, கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளது. மேலும், கேரள மாநில மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பந்திப்பூர் சாலையை இரவு நேரத்தில் திறக்க வலியுறுத்தும் கேரள அரசை கண்டித்து சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதி முழுஅடைப்பு போராட்டத்துக்கு கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டத்துக்கு அனைத்து கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள், வியாபாரிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.