தொடர் மழை எதிரொலி: வராகநதி அணைக்கட்டு நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் வராகநதி அணைக்கட்டு நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே செலவபுரை கிராமத்தில் வராகநதி ஆற்றின் குறுக்கே 1969-ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டுக்கு திருவண்ணாமலை மற்றும் பாக்கம் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வரும். இந்த அணைக்கட்டு நிரம்பி, அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் சங்கராபரணி ஆறு வழியாக வீடூர் அணைக்கு செல்லும். அணைக்கட்டின் இடதுபுற வாய்க்கால் வழியாக வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட 17 ஏரிகளுக்கு செல்லும்.
இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில் இந்த அணைக்கட்டு சரியான பராமரிப்பு இல்லாததாலும், மழைவெள்ளத்தாலும் சேதமடைந்து போனது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதமடைந்த அணைக்கட்டு, இடதுபுற வாய்க்கால் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரி, சீரமைக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்அடிப்படையில் ரூ.10 கோடி செலவில் வராகநதி அணைக்கட்டு சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாக்கம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைக்கட்டிற்கு தண் ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் வறண்டு கிடந்த அணைக்கட்டு வேகமாக நிரம்பி வழிந்தது.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வல்லம் ஒன்றியத்தில் உள்ள 17 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக அணைக்கட்டு இடதுபுற வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட்ட னர். இதன்காரணமாக செவலபுரை-சிறுவாடி கிராமம் இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வல்லம் பகுதி விவசாயிகள் கூறுகையில், அணைக்கட்டின் இடதுபுற வாய்க்கால் மற்றும் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்கள் பல இடங்களில் செடி, கொடிகளால், தூர்ந்தும், கரைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செவலபுரை-சிறுவாடி இடையே தரைப்பாலத்தில் மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து முற்றிலும் தடை படும். இதனால் அந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வரும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைவார்கள்.
ஆகவே தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டி தருவதோடு, 17 ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால்களை தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.