நெல்லிக்குப்பத்தில், ஊக்கத்தொகை ரூ.137 கோடி வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஊக்கத்தொகை ரூ.137 கோடி வழங்கக்கோரி நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஊக்கத்தொகை ரூ.137 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், கரும்புக்கு வெட்டுக்கூலி மற்றும் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு வாடகை கட்டணத்தை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25-க்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணை செயலாளர் சரவணன், மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன், தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் காந்தி, சம்பத், லோகநாதன், குமரகுருபரன், வெங்கடேசன், மெய்யழகன், கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ஜெயதேவன், விஜயகுமார், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை அழைத்து ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் சர்க்கரை ஆலை அதிகாரிகள், உங்களது கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கரும்பு விவசாயிகள் கலைந்து சென்றனர்.