டெல்லியில் சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு - இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-10-16 23:45 GMT
பெங்களூரு, 

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா, தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்தும், அதற்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் சித்தராமையா விவரங்களை எடுத்துக் கூறினார். சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என் மீது நம்பிக்கை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கியதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்தேன். இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து எடுத்துக் கூறினேன். முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து அவர் கேட்டார். எனக்கும் முழுமையாக என்னவென்று தெரியாது, பத்திரிகைகளில் வந்த செய்திப்படி அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை என்று கூறினேன்.

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சி செய்வேன் என்று உறுதியளித்தேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மீண்டும் காங்கிரசில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசின் கொள்கைகளை ஏற்று வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக நான் கூறினேன். ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு இது பொருந்தாது.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு செத்துவிட்டது. எந்த பணிகளும் நடைபெறவில்லை. சட்டசபை கூட்டத்தொடரை நீட்டிக்குமாறு நாங்கள் கேட்டோம். வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கூட்டத்தொடரை நீட்டிக்கவில்லை. ஆனால் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரிகள் ஆகியோர் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடாமல், மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதில் இந்த அரசு ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் நான் பேசினேன். ஆனால் சபாநாயகர் என்னை பேசவிடாமல், உடனே முடிக்கும்படி காலக்கெடு விதித்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிப்பதை நான் பார்த்தது இல்லை.

சபாநாயகர் காகேரி, ஆர்.எஸ்.எஸ். சொல்படி நடந்து கொள்கிறார். மக்களின் முழு ஆதரவை பெற்று எடியூரப்பா முதல்-மந்திரி ஆகவில்லை. இது சட்டவிரோதமாக அமைந்த அரசு. இந்த சட்டவிரோத அரசின் முதல்-மந்திரியாக எடியூரப்பா செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்