அந்தேரியில் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளரான பெண் டாக்டர் தற்கொலை; பணம் எடுக்க முடியாத விரக்தியில் விபரீதமா?

பி.எம்.சி. வாடிக்கையாளரான பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். பணம் எடுக்க முடியாத விரக்தியில் அவர் இந்த முடிவை தேடிக்கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-10-16 23:00 GMT
மும்பை,

மும்பை அந்தேரி வெர்சோவா பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் நிவேதா பிஜ்லானி(வயது39). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். இதன்பின் கடந்த ஆண்டு அவரது பெற்றோர் வெர்சோவாவிற்கு அழைத்து வந்தனர். அவரது பெயரில் பி.எம்.சி வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

பி.எம்.சி. வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியதால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அவர் நேற்றுமுன்தினம் வீட்டின் அறையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பெண் டாக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பி.எம்.சி. வங்கியின் பரிவர்த்தனை முடக்கப்பட்டதால், தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல முல்லுண்டு காலனியை சேர்ந்த பட்டோமால் பஞ்சாபி என்பவர் நேற்று முன்தினம் பி.எம்.சி வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதேபோல ஒசிவாரா பகுதியை சேர்ந்த ஜெட்ஏர்வேஸ் முன்னாள் ஊழியரான சஞ்சய் குலாதி என்பவர் பி.எம்.சி. வங்கியில் ரூ.90 லட்சம் போட்டு வைத்து இருந்தார். அவர் 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்