கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-10-16 23:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலுக்கு நேற்று காலையில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், சின்னப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் வந்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவிலில் நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையில் அரிஹரபட்டர் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கு பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

பின்னர் அவர்கள் கோவில் அரங்கில் தரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில் முன்பு 93 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், அதற்கான வரைபடத்தை துணை முதல்-அமைச்சரிடம் காண்பித்தார். அதனை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தையும் பார்த்தார்.

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் உள்ள ஓடப்பட்டி வன்னிவிநாயகர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்