கயத்தாறில் நினைவு தினம்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கயத்தாறு,
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில், சின்னப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், தமிழ்நாடு அனைத்து நாயுடு நாயக்கர் சங்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன், செயல் தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் சடகோபன் ராமானுஜம், இணை செயலாளர் திலீப்குமார், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் கே.எஸ்.குட்டி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு பீமராஜா, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், அ.தி.முக. ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மண்டல துணை தாசில்தார் தங்கையா, கயத்தாறு பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்னிந்தியாவில் முதல் விடுதலை போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.2 கோடியில் மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி மணிமண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 7 அடி உயர வெண்கல சிலை, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. விளாத்திகுளத்தில் விடுதலை போராட்ட காலத்தில் இசை மூலம் போராடிய சாமி என்ற இசை கலைஞருக்கு நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அதிகளவில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
சீமான் ஆளும் கட்சி அமைச்சர்களை திருடன் என்று கூறி உள்ளார். அவர் ஆணவத்துடன் அதனை சொல்லி இருக்கிறார். அவர் தன்னிலை மறந்து பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு கருத்து தெரிவிக்க தேவையில்லை.
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் மத்தியிலும், மாநிலத்திலும் தாய்-குழந்தை போல் தான் உள்ளோம். எங்களின் செயல்பாடு நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது போல் தான் இந்த 2 தொகுதி இடைத்தேர்தலிலும் இருக்கும். சீன அதிபர் வருகையால் தமிழகத்துக்கு தனி இடத்தை பெற்று தந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, வீரசக்க தேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பலர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் மாநில தலைவர் சங்கரவேலு தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரத்தினபாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் வேலுசாமி, மாநில துணைத்தலைவர்கள் பூச்சி குருசாமி, சுப்புராஜ், ராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம், விருதுநகர் மாவட்ட தலைவர் சங்கரராஜ், பொருளாளர் குணசேகரன், துணை செயலாளர் குருசாமி, மாவட்ட தலைவர்கள் பழனிச்சாமி (நாமக்கல்), கலையரசன் (கரூர்), அழகர்சாமி (ராமநாதபுரம்), நல்லையாசாமி (நெல்லை), திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்நாடு பண்பாட்டு கழகம் சார்பில், சென்னை கோட்டையில் கட்டபொம்மன் சிலை அமைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நாயக்கர் சமுதாய மக்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். திண்டுக்கல்லில் விடுதலை போராட்ட வீரர் கோபால்சாமிக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.