முக்கியமான வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.ஐ.ஜி. பேச்சு
முக்கியமான வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதவி உயர்வுபெற்ற இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி முகாமில் டி.ஐ.ஜி. காமினி பேசினார்.
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி உர்வு பெற்றவர்களுக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பணியிடை பயிற்சி மையத்தில் 6 வாரங்கள் பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பதவி உயர்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 13 பேர் பெண்கள்.
இவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம், சைபர் கிரைம், தடய அறிவியல் உள்பட பல்வேறு வழக்குகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் நிலவழகன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்்.
பயிற்சியை வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பதவி உயர்வு பெற்றுள்ள நீங்கள் பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான வழக்குகளை நன்கு தீவிரமாக விசாரித்து வழக்கில் இருந்து குற்றவாளி தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கமாக போலீசார் விசாரிக்கும் வழக்குகளை தவிர்த்து சைபர்கிரைம், பண பரிமாற்றம், போதைப்பொருள் போன்ற வழக்குகளை எப்படி விசாரிப்பது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு வழக்கில் குற்றவாளியான ஒருவர் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.