மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த இலவச தொலைபேசி எண் - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த இலவச தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சி கருத்தரங்கம் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை விருப்பப்பாடமாக படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 300 மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் தோல்வி அடைகின்றனர். அவர்களும் வெற்றி பெறக்கூடிய வகையில் ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தொழிற்கல்வி பாடங்களுக்கான பாட புத்தகங்களை எழுதுவதற்கு நமது மாவட்ட ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டது பாராட்டுதலுக்குரியது. மேலும் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் 144 17 என்ற இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் என்றார்.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி முன்னிலை வகித்து பேசினார் கருத்தாளர் சி.ரவிவர்மன் வரவேற்று பேசினார். தொழிற்கல்வி பாடங்களுக்கு பாடப் புத்தகங்களை எழுதிய செ.நா.ஜனார்த்தனன், க.ராஜா, சி.ரவிவர்மன், சீனிவாசன், பரிமளாதேவி, லத்தி மார்த்தாள் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சால்வை அணிவித்து பாராட்டினார்.
முடிவில் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.