வன்னியர்களுக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை - விக்கிரவாண்டியில் வேல்முருகன் பேச்சு
வன்னியர்களுக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை என்று விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் வகையில் விக்கிரவாண்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் சமுதாயத்தில் உள்ள சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் தற்போது தி.மு.க. எடுத்துள்ள நிலைப்பாட்டின் காரணமாக தான் தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உள்ளது. பா.ஜனதா, அ.தி.மு.க.வை தூக்கி எறிய வேண்டும் என்கிற ஒரே கண்ணோட்டத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை பெற செய்தீர்கள். அதே புரிதலில் இந்த இடைத்தேர்தலிலும் நீங்கள் வாக்களித்திட வேண்டும்.
‘நீட்’ தேர்வில் மாணவர்களை பலி கொண்ட ஆட்சி இதுவாகும். தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்து வரும் இந்த ஆட்சியை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சம் மலிந்து கிடக்கிறது. தாது மணலில் ரூ.60 லட்சம் கோடியும், மணல் குவாரியில் 10 லட்சம் கோடி ரூபாயும் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை எதிர்த்து மருத்துவர் கவர்னரிடம் மனு அளித்தார்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 23 பேரின் குடும்பங்களுக்கு மருத்துவர் என்ன கொடுத்தார். அவர்களை வாழ வைத்தது உண்டா, தனது சொந்த நிதியில் இருந்து அவர்களுக்கு உதவிகள் வழங்கியது உண்டா என்றால் இல்லை. ஆனால் வன்னியர் இனத்தின் மீது பற்று வைத்து மு.க.ஸ்டாலின் உள் ஒதுக்கீடு வழங்கவும், கோவிந்தசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கட்டி தருவோம் என்றும் அறிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு கலைஞர் கருணாநிதி இட ஒதுக்கீடு அளித்த போது, நான் ஒரு கனி கொடுத்துள்ளேன் வன்னியர்கள் அதை ருசித்து பார்த்து விட்டு, அது இனிக்கிறதா, புளிக்கிறதா என்று சொல்லுங்கள். மீண்டும் ஆட்சிக்கு வரும் போது உள்இட ஒதுக்கீடு தருகிறேன் என்று தெரிவித்தார்.
அதன்பின்னர் கருணாநிதி அதை மறந்து விட்டார். ஆனால் அவரது மகன் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்து உள்இட ஒதுக்கீட்டை வன்னியர் மக்களுக்காக அறிவித்துள்ளார். அதை குறை சொல்வதா?. இந்த இனத்துக்காக தி.மு.க.தான் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி உள்ளது.
பா.ம.க.வில் இருந்து வெளியேறிய எத்தனையோ பேர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால் அதிலிருந்து விலகி வந்து, அவர்களை எதிர்த்து 8 ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டுமே.
கருணாநிதி இந்த சாதியினருக்கு என்ன செய்யவில்லை. அவர் இந்த இனத்திற்கு செய்த துரோகம் என்ன. இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு பென்சன் வழங்கியவர் கருணாநிதி தான். டாக்டர் அன்புமணிக்கு மந்திரி பதவியை வாங்கி கொடுத்தது கருணாநிதி ஆவார். வன்னிய இனத்துக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை.
மாறி, மாறி கூட்டணி வைத்து வன்னியர்களை அடகு வைத்து தனது சந்ததியினர் வாழ்வதற்காக சொத்துக்களை சேர்த்துக்கொண்டவர் மருத்துவர் ஆவார். வன்னியர் மக்களுக்கு என்ன செய்தார் என்பது குறித்து விவாதம் நடத்த அவர் தயாரா?.
எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் அ.ராசா எம்.பி., சேலம் மாவட்ட செயலாளர் வீராபாண்டி ஆ.ராஜா, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்கவுதமசிகாமணி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் மின்னல் தினேஷ், ஒன்றிய செயலாளர்கள் விக்கிரவாண்டி ஏழுமலை, ஜெகதீசன், காணை கிருஷ்ணமூர்த்தி, சக்கரபாணி, கோலியனூர் அய்யனார், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.