கோவை அரசு ஆஸ்பத்திரியில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் தனிப்பிரிவு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-10-16 22:15 GMT
கோவை,

தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சல்கள் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு உள்ளது.

இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல், குப்பைகளை உடனுக்குடன் அள்ளி அப்புறப்படுத்துதல் உள்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பால், புற நோயாளிகளாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடத்தின் கீழ் பகுதியில் காய்ச்சல் பாதிப்புக்கு 24 மணி நேர புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு என்ற பெயரில் தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்பிரிவில் 24 மணி நேரமும் டாக்டா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு உள்ளனா். அத்துடன் ரத்த பரிசோதனை ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் தேவைக்கு ஏற்ப டெங்கு காய்ச்சலுக்கான பரி சோதனை செய்யப்படுகிறது.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனா். மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேரும் என மொத்தம் 137 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்