அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமற்ற சத்துமாவு - மாணிக்கம்தாகூர் எம்.பி. புகார்

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தரமற்ற சத்துமாவு வழங்கும் நிலை உள்ளதால் இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணிக்கம்தாகூர் எம்.பி. முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.

Update: 2019-10-16 23:00 GMT
விருதுநகர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி களுக்கும் சத்துணவு மாவு வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம் இந்த சத்து மாவு வழங்கப்படுகிறது. இதன் நோக்கமே குழந்தைகளுக்கு சரிவிகித சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த சத்துமாவு தகுதி வாய்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதுடன், அதிகாரிகளால் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவில் புழு மற்றும் வண்டுகள் இருப்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோரும், கர்ப்பிணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தைகளின் நலன் கருதி வழங்கப்படும் சத்துமாவு அவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தரம் குறைந்து இருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டால் இந்த குறைபாட்டினை தவிர்த்து இருக்கலாம். அதிகாரிகளோ, அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களோ இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருந்ததால்தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி இது குறித்த புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து தகவல் தெரிந்தவுடனேயே இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் வரவில்லை என கூறி பொறுப்பை தட்டிக் கழித்து பாராமுகமாக உள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். குழந்தைகள் நலன் குறித்த விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

எனவே மாவட்ட நிர்வாகம் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள தரம் குறைந்த சத்து மாவு பாக்கெட்டுகளை திரும்ப பெறவும், வருங்காலத்தில் உரிய ஆய்வுக்கு பின் தரமான சத்துமாவை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தரக்குறைவான சத்துமாவு பாக்கெட்டுகளை தயாரித்து கொடுத்த உற்பத்தியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் சத்துமாவை ஆய்வு செய்து சான்றளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்