விக்கிரவாண்டி தொகுதியில், நாளை மறுநாள் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் 19-ந் தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிரசாரம் செய்தார். இதன் தொடர்ச்சியாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் எப்போது வருவார்? என்று அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரசாரத்தின் இறுதி நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) விஜயகாந்த் வருகை தருகிறார். இவர் அன்று மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து எசாலம், கஞ்சனூர், சூரப்பட்டு, காணை ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.