வீர சாவர்கரை தொடர்ந்து பா.ஜனதா கோட்சேவுக்கும் `பாரத ரத்னா' விருது கேட்கும் - டி.ராஜா தாக்கு
வீர சாவர்கரை தொடர்ந்து, பா.ஜனதா கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க கேட்கும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், வீர சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:-
நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் பா.ஜனதா அவரது படுகொலை வழக்கில் தொடர்புடைய வீரசாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.
அந்த கட்சி காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடும் காலம் வெகுதொலைவில் இல்லாமல் இருக்கலாம்.
பா.ஜனதாவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிப்பதே நமது முதன்மையான நோக்கம். போட்டியிடாத தொகுதிகளில் நாங்கள் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்போம். பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி மக்களை கேட்போம்.
மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பற்றி தான் பேசுகிறார். விவசாயிகள் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை, பி.எம்.சி. வங்கி ஊழல் ஆகியவற்றில் மவுனமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.