வங்கிக்கணக்கில் ரூ.90 லட்சம் வைத்திருந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் திடீர் சாவு
பி.எம்.சி. வங்கிக்கணக்கில் ரூ.90 லட்சம் வைத்திருந்த வாடிக்கையாளர் ஆர்ப்பாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை ஒஷிவாரா தாராபோரே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சய் குலாதி (வயது51). இவர் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் ஆவார். நிதிநெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டதால் வேலையை இழந்து தவித்து வந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் பி.எம்.சி. வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. இதனால் அந்த வங்கியில் ரூ.90 லட்சம் வரை சேமித்து வைத்திருந்த சஞ்சய் குலாதிக்கு பேரிடியாக இருந்தது. ஒரே சமயத்தில் வேலையும் போய், வங்கிக்கணக்கில் இருந்த பணத்தையும் எடுக்க முடியாமல் அடிக்குமேல் அடி விழுந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தென்மும்பை கில்லா கோர்ட்டு முன், தங்களது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்க வலியுறுத்தி பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சஞ்சய் குலாதி கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் மாலையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சஞ்சய் குலாதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினர்.
தனது ரூ.90 லட்சத்தை வங்கியில் இருந்து எடுக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வீடு திரும்பிய சஞ்சய் குலாதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.