வருமான வரி அதிகாரிகள் முன்பு பரமேஸ்வர் ஆஜர்; பதிலளிக்க 3 நாட்கள் காலஅவகாசம்

சோதனையில் சிக்கிய பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக வருமான வரி அதிகாரிகள் முன்பு பரமேஸ்வர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் பதிலளிக்க 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கி வருமான வரி அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Update: 2019-10-15 23:30 GMT
பெங்களூரு, 

முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் வீடு, அலுவலகங்கள், கல்லூரிகளில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் பரமேஸ்வரின் உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 15-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பரமேஸ்வருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10.30 மணிக்கு பரமேஸ்வர் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். அப்போது பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியதை அடுத்து இன்று (அதாவது நேற்று) அதிகாரிகள் முன்பு ஆஜரானேன். ஆவணங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அதிகாரிகளும், தாங்கள் கைப்பற்றியுள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறினர். பின்னர் என்னுடைய ஆவணங்களை நான் தாக்கல் செய்யவும் 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளனர். எனது உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் குடும்பத்தாரும் துக்கத்தில் உள்ளனர். ரமேஷ் தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சிலர், நானே கொலை செய்துள்ளதாக கூறுகிறார்கள். அவரது பெயரில் நான் பினாமி சொத்துகள் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ரமேஷ் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியே வர வேண்டும். அதற்கு சரியான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். சோதனையின்போது என்னை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்