அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் சிக்கினான்; 78 பவுன் நகைகள் மீட்பு

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து 78 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2019-10-15 23:00 GMT
அருப்புக்கோட்டை ,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகபூபதி (வயது 54). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வரும் இவர் பணம் வசூலுக்காக பந்தல்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். இதை கவனித்த பொதுமக்கள் அவனை விரட்டிச் சென்றனர்.

இறுதியில் அவன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பதுங்கினான். பின்னர் பொதுமக்கள் ஒன்றுகூடி அவனை பிடித்து பந்தல்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவன் சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பதும், பிரபல கொள்ளையன் என்பதும் தெரிய வந்தது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, பொள்ளாச்சி, தென்காசி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையன் மணிகண்டன் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து 78 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்