கொள்முதல் செய்யாததை கண்டித்து பாலை கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்
ஆதனூர் கிராமத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து பாலை கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பால் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணியும், செயலாளராக சங்கர் என்பவரும் உள்ளனர். இந்த சங்கத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து தினமும் காலையும், மாலையும் சுமார் 3 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட பால் அனக்காவூரில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆவினுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பாலின் தரம், அளவு நிர்ணயம் செய்ய பெரியண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தர நிர்ணயம் செய்தபின்னர் தான் குளிரூட்டும் நிலையத்துக்கு பால் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்துக்கு பால் கொண்டு வந்தனர். ஆனால் பெரியண்ணன் வரவில்லை. இதையடுத்து பால் ஏற்றிச் செல்லும் வேன் சென்று விட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைவர் மணி அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், வாரத்தில் ஒரு நாள் இ்வ்வாறு பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை. மேலும் முதலில் பால் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மற்றவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அனைவரிடமும் பால் கொள்முதல் செய்ய வேண்டும். தர நிர்ணயம் செய்ய வருபவர் சரியான நேரத்துக்கு வர வேண்டும் அல்லது வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தலைவர் மணி, இதுகுறித்து தலைமையிடத்துக்கு கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.