கூடலூர் ஊசிமலை காட்சிமுனை பகுதியில் ரோப்கார் சேவை தொடங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கூடலூர் ஊசிமலை காட்சிமுனை பகுதியில் ரோப்கார் சேவை தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கேரள-கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் பெரிய அளவில் இல்லை. ஆனால் அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு கூடலூர்-ஊட்டி சாலையில் உள்ள யூகலிப்டஸ் மரப்பண்ணை, ஊசிமலை காட்சிமுனையை ரசித்து வருகின்றனர்.
வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தாலும் கடந்த காலங்களில் இக்காட்சிமுனையில் சினிமா படப்பிடிப்புகள் அதிகளவு நடைபெற்று வந்தது. மேலும் சுற்றுலா பயணிகளும் இலவசமாக கண்டு ரசித்து வந்தனர். ஆனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட வில்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் இயற்கை பள்ளத்தாக்குகளை காட்சிமுனை பகுதியில் நின்று வெகுவாக ரசித்து வந்தனர்.
ஆனால் சுற்றுலா பயணிகளின் போர்வையில் காட்சிமுனைப்பகுதியில் சமூக விரோதிகள் நுழைந்து பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வனத்துறை சார்பில் ஊசிமலை காட்சிமுனைக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகளும் அதிகளவு வந்து காட்சிமுனையை ரசித்து வருகின்றனர்.
அதன்பின்னர் வனத்துறை சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடமாடும் கழிப்பறைகளும் உள்ளது. போதிய வருவாய் கிடைப்பதால் ஊசிமலை காட்சிமுனைப்பகுதியில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெண்கள், குழந்தைகள் அச்சம் இன்றி காட்சிமுனைப்பகுதிக்கு நடந்து செல்கின்றனர். தற்போது நபர் ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊசிமலை காட்சி முனை பகுதியில் ரோப்கார் சேவை தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஊசிமலை காட்சிமுனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஊசிமலை காட்சிமுனை பகுதியை காண கட்டணம் வசூலிக்கப்பட்டு சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 9 லட்சத்து 90 ஆயிரம் சுற்றுலா பயணிகள் காட்சிமுனையை கட்டண டிக்கெட் பெற்று ரசித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.