தலைவாசல் அருகே, வீடு புகுந்து 36 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தலைவாசல் அருகே வீடு புகுந்து 36 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தலைவாசல்,
தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெய்ராம் (வயது 60). இவருடைய மனைவி லதா (55). இவர்களது மகன் சுரேஷ் ஆனந்த் (36). இவர்களுக்கு சொந்தமாக நாவக்குறிச்சியிலும், தலைவாசலிலும் மளிகை கடைகள் உள்ளன.
நாவக்குறிச்சியில் இவர்களது வீட்டுக்கு எதிரில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடையை லதாவும், தலைவாசலில் உள்ள கடையை ஜெய்ராம், சுரேஷ் ஆனந்த் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.
மளிகை கடைக்கு எதிரிலேயே வீடு இருந்ததால், வீட்டை பூட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல தலைவாசலில் உள்ள கடைக்கு ஜெய்ராம், சுரேஷ் ஆனந்த் ஆகியோர் சென்று விட்டனர். நாவக்குறிச்சியில் உள்ள கடைக்கு சென்ற லதா, இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீேரா திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பீரோவில் இருந்த 36 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ராம் வந்து பார்த்த போது, வீடு திறந்து இருந்ததால், அதை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீடு புகுந்து 36 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஜெய்ராம் தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.