உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 25-ந்தேதிக்குள் சரிபார்க்க உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வருகிற 25-ந் தேதிக்குள் சரிபார்க்கும்படி உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-15 22:15 GMT
திண்டுக்கல், 

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு விட்டன.இதையடுத்து வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தலுக்கு வழக்கம் போல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக மாவட்டம் வாரியாக தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு 3 ஆயிரத்து 396 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,968 கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்துள்ளன. இவை கலெக்டர் அலுவலகத்தில் தனி அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 691 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வருகிற 25-ந்தேதிக்குள் சரிபார்க்கும்படி உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தயாராக உள்ள எந்திரங்கள், பழுதான எந்திரங்கள் குறித்து அறிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் திண்டுக்கல்லில் இன்னும் ஒருசில நாட்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்