தொண்டி அருகே மின்னல் தாக்கி பெண் பலி

தொண்டி அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.

Update: 2019-10-15 23:00 GMT
தொண்டி,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுச்சந்தை அருகே வசித்து வருபவர் சேகர்(வயது 42). இவர் செங்கல்சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மலர்(38), கூலித்தொழிலாளி. நேற்று காலையில் இவரும், அதே ஊரைச் சேர்ந்த சில பெண்களும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மங்கலக்குடி அருகே உள்ள ஊரணிக்கோட்டை கிராமத்தில் வயலில் களை எடுக்க சென்றனர். அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மலர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் களை எடுத்து கொண்டிருந்த மற்ற பெண்களும் மயங்கி விழுந்தனர். இதுபற்றி தகவலறிந்த பழங்குளம் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, திருவாடானை தாசில்தார் சேகர், மங்கலக்குடி வருவாய் ஆய்வாளர் கேசவன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்