கரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 50 படைப்புகள் இடம்பெற்றன

கரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 50 படைப்புகள் இடம்பெற்றன.

Update: 2019-10-15 23:00 GMT
கரூர்,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, புலியூர் ராணி மெய்யம்மை பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகள் சிவராமன் (கரூர்), கபீர் (குளித்தலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்கனவே கரூர், குளித்தலை கல்வி மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சி மூலம் தேர்வான 50 படைப்புகள் இதில் இடம் பெற்றிருந்தன.

அதில் பெருகிவரும் நகரமயமாதலால் நாளுக்கு நாள் கழிவுநீர் வெளியேற்றம் அதிகளவில் நடக்கும் நிலையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, சாலை விதிகளை பின்பற்றுவது, புற்றுநோய்க்கான மருத்துவ முறை, நீர் மேலாண்மையை கையாள்வது உள்ளிட்ட படைப்புகள் காண்போரை கவரும் விதமாக இருந்தன.

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

பல்வேறு பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து இந்த கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் குழுவினர் நடுவர்களாக செயல்பட்டு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். அந்த படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்வான படைப்புகள், கரூரில் வருகிற 30, 31 மற்றும் நவம்பர் 1-ந்தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் செய்திருந்தார். 

மேலும் செய்திகள்